கோயில் நிதி தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயில் நிதியை பயன்படுத்தி வணிக வளாகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற கட்டடங்களை கட்டத் தடை விதித்து, அவை தொடர்பான பணிகளை உடனடியாக நிறுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் ஆலய வழிபாடாளர் சங்கத் தலைவர் டி.ஆர். ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், “கோயில்களின் கூடுதல் வருமானத்தை கொண்டு வணிக நோக்குடன் கட்டடங்கள் கட்டவேக்கூடாது என ஏற்கனவே உயர்நீதிமன்றமும், அதனை உறுதி செய்து உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளன” என கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை மீறி, தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கோயில் நிதியை கொண்டு திருமண மண்டபங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் நிர்வாகக் கட்டிடங்களை கட்டி வருகிறது. இதுபோன்ற பணிகள் தொடங்கும் முன், பக்தர்களின் கருத்தையும், கோயிலின் அறங்காவலர் குழுவின் அனுமதியையும் பெற வேண்டியது அவசியம்.
ஆனால், இவ்விதிமுறைகளை புறக்கணித்து, பல கோயில்களில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்பில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர், பழனி தண்டாயுதபாணி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, திருநெல்வேலி நெல்லையப்பர் உள்ளிட்ட முக்கிய கோயில்களின் நிதி இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதையடுத்து, கோயில் நிதியைக் கொண்டு எந்த கட்டுமானத்தையும் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. மனுதாரருக்கு சார்பாக வழக்கறிஞர்கள் பி. ஜெகந்நாத் மற்றும் நிரஞ்சன் ராஜகோபாலன் வாதிட்டனர். அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அருண் நடராஜன் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ஜெகந்நாத் ஆஜராகினர்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே பி. பாஸ்கர் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அரசு அதிகாரிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், அறநிலையத்துறை இந்த வழக்கில் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், ஜூலை 24-ம் தேதி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, அதுவரை எந்த புதிய கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் உறுதியான உத்தரவு பிறப்பித்தது.