மக்களுக்கு நேரடியாக சேவைகளை வழங்கும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் – முதல்வர் ஜூலை 15ல் தொடக்க விழா

0

மக்களுக்கு நேரடியாக சேவைகளை வழங்கும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் – முதல்வர் ஜூலை 15ல் தொடக்க விழா

மக்களின் வசிப்பிடத்திற்கு நேராக சென்று, அரசுத் துறைகள் வழங்கும் சேவைகள் மற்றும் நலத் திட்டங்களை எளிதாக கிடைக்கச் செய்யும் நோக்கில், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்ட முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜூலை 15ஆம் தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைக்க உள்ளார். இதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தவறிய பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பின் பேரில், மக்களின் கோரிக்கைகள், பிரச்சனைகள் நேரில் கேட்டு தீர்வு காணும் வகையில், இந்த புதிய முயற்சி சட்டப்பேரவையில் முதல்வரால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் உட்பட மாநிலமெங்கும் இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. முக்கிய நோக்கம் – மக்கள் பயன்பெறும் அரசு சேவைகளை அவர்களது வீட்டு வாசலிலேயே கொண்டு செல்லுவது.

மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில், நகரப் பகுதிகளில் 3,768 மற்றும் கிராமப் பகுதிகளில் 6,232 முகாம்கள் நடைபெறும். முதல் முகாம் சிதம்பரம் நகராட்சியில் ஜூலை 15ல் ஆரம்பமாகும். இதற்குப் பிறகு நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் நடைபெறும்.

இந்த முகாம்களில்,

  • நகரப் பகுதிகளில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகள்,
  • ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் சார்ந்த 46 சேவைகள்,
  • மேலும் மருத்துவ முகாம்கள் வழங்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பெண்கள் இதில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு தேவையான விண்ணப்பங்கள் இந்த முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இங்கு பெறப்படும் விண்ணப்பங்கள், 45 நாட்களுக்குள் விசாரணை செய்யப்படும்.

முகாம் நடைபெறும் நாள், இடம், வழங்கப்படும் சேவைகள், அதற்கான தகுதிகள், தேவையான ஆவணங்கள் குறித்த தகவல்களை தன்னார்வலர்கள் வீடுகளுக்குச் சென்று மக்களுக்குத் தெரிவிப்பார்கள். விண்ணப்பப் படிவங்களும், தகவல் கையேடும் வழங்கப்படும். இப்பணி ஜூலை 7ஆம் தேதி தொடங்கும். இதில் 1 லட்சம் தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த சேவை 3 மாதங்கள் தொடர்ந்து நடைபெறும்.

மேலும், மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு அண்மையில் சில தளர்வுகள் அரசு வெளியிட்டுள்ளன.

அதன்படி:

  • சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுத் தற்போது ஓய்வில் உள்ளவர்களின் குடும்பத்தில் உள்ள, ஓய்வூதியம் பெறாத பெண்கள்
  • மாணியம் பெறும் குடும்பத்தில் நான்கு சக்கர வாகனம் இருந்தாலும், பெண்கள் விண்ணப்பிக்கலாம்
  • இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம் அல்லது ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள, ஓய்வூதியம் பெறாத பெண்கள்
  • கணவனால் கைவிடப்பட்ட, அல்லது 50 வயதுக்கு மேல் திருமணமாகாத பெண்கள் உள்ள குடும்பங்களின் மற்ற பெண்கள் – இவர்கள் அனைவரும் தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments Box