விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:
கச்சத்தீவை இந்தியா மீட்டுத் தீர்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வரும் நிலையில், இன்னும் மத்திய அரசு எந்தவொரு உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதே கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
தமிழகத்தில் சங்பரிவார் நடத்தும் அரசியலுக்கு இடமளிக்காமல் தடுக்கும் வகையில், அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.
நடிகர் விஜய்க்கு மத்திய அரசு ஏற்கனவே ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு ‘Z Plus’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை எங்கள் கட்சி வரவேற்கிறது. அந்த கூட்டணியில் அதிமுக மிகப்பெரிய கட்சியாக இருந்தாலும், “தேர்தலுக்குப் பிறகு தான் முதல்வர் யார் என்பதைக் குறித்த முடிவு எடுக்கப்படும்” எனும் நிலைப்பாடு கேள்விக்குரியது. இதுபற்றி பழனிசாமிதான் விளக்கம் அளிக்க வேண்டும்.
திமுகவும் பாஜகவும் கொள்கை எதிரிகள் என கூறிய தவெக் தலைவர் விஜய், அதிமுக குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது அவருக்கு அதிமுக தோழமைக்கட்சியாக தோன்றுகிறதா என்பதையே கேள்வியாக எழுப்புகிறது. இதற்கான பதிலை விஜய் அளிக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.