“சட்டத்தை மீறி காவலர்கள் செயற்படுகின்றனர்” – ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர், தனிப்படை போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“சட்டத்தின் வரம்பில் இருந்து செயல்பட வேண்டிய காவல் துறையினர், சட்டத்தை தாண்டி, கொடூரமாக தாக்குதல் நடத்தியதால் அஜித்குமாரின் உயிர் போயுள்ளது. இது போன்ற சட்ட மீறல்களை கடுமையாக எதிர்த்து, கண்டிக்க வேண்டிய சூழ்நிலையில் நாமிருக்கிறோம்.
தற்போது தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது. இந்த நிலை மாற்றப்படாவிட்டால், திமுக அரசு சாய்ந்து விடும். காவல்துறை அதிகாரிகளின் வசம் நாடு நடக்கிறது என்பதுபோல் இருக்கிறது. அஜித்குமாரின் மரணத்திற்கு காரணமானவர்கள் விரைவில் விசாரணை செய்யப்பட்டு, தக்க தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
தலைமை பதவிக்கு ஆர்வம் இல்லாத தலைவர் யாரும் இருக்க முடியாது. எனினும், முதல்வராக யார் அமர வேண்டும் என்பது மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டியது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததுதான் வரலாறு. அதேபோல, பறிக்கப்பட்ட அதிமுக தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவே நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம்,” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.