அருப்புக்கோட்டையில் கோயிலுக்கு நடிகை த்ரிஷா வழங்கிய இயந்திர யானை ‘கஜா’
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயிலில், ஜூலை 2-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, இந்தக் கோயிலுக்கு ‘கஜா’ என பெயரிடப்பட்ட ஒரு இயந்திர யானையை, நடிகை த்ரிஷா மற்றும் சென்னையைச் சேர்ந்த ‘பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா’ எனும் தன்னார்வ அமைப்பினர் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
இயந்திர யானை, நிஜ யானையைப் போலவே தோற்றமளிக்கிறது. இது தனது பெரிய காதுகள், தும்பிக்கை மற்றும் வாலை நகர்த்தக்கூடிய திறன் கொண்டது. மேலும் தும்பிக்கையின் மூலம் தண்ணீர் பீய்ச்சுவதும், ஆசிர்வாதம் செய்வதும் இதன் சிறப்பம்சங்கள் ஆகும். இந்த இயந்திர யானையை வழங்கும் விழா ஜூன் 27-ஆம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்வில் டிஎஸ்பி மதிவாணன் பங்கேற்று, யானையை வழங்கி அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். இந்த இயந்திர யானையை பார்த்த பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர்.
இதுகுறித்து பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா குழுவினர் கூறும்போது, “2023-ஆம் ஆண்டு, உலகிலேயே முதன்முறையாக ‘இரிஞ்சாடப்பிள்ளி ராமன்’ என்ற இயந்திர யானையை கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு நாங்கள் வழங்கினோம். இப்போது, தமிழகத்தில் முதன்முறையாக அருப்புக்கோட்டையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளாவில் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திர யானையின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம். கோயில் விழாக்கள் மற்றும் சடங்குகளில் பயன்படுத்த இது தயாராக உள்ளது.
இது நிஜ யானைகளை பயன்படுத்தும் பழமையான முறைக்கு மாற்றாக, உயிர்களையும் மனிதாபிமானத்தையும் கருதிய ஒரு புதிய முயற்சியாகும். தமிழ்நாட்டில் தற்போது 29 கோயில்களில் யானைகள் உள்ளன. பல இடங்களில் அவை துன்புறுத்தப்படுகின்றன. சமீபத்தில் திருச்செந்தூரில் 2 பாகன்களை ஒரு யானை கொன்றதுபோன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இவை மீண்டும் நடைபெறாமல் இருக்கவும், விலங்குகளின் நலனை பாதுகாக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றனர்.