ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்

0

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில், 28 ஆண்டுகளுக்கு பின் புதன்கிழமை காலை கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கோயில், ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பூக்குழி திருவிழாவிற்காக பிரபலமானது. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனாக பூக்குழி இறங்குவது வழக்கம். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள இந்த கோயிலில், இதற்கு முந்தைய கும்பாபிஷேகம் 1997-ஆம் ஆண்டு நடைபெற்றது.

2022 ஜூனில் பாலாலயமும், அதன் பின் திருப்பணிகளும் தொடங்கப்பட்டன. பக்தர்களின் நிதியுதவியில் புதிய கொடிமரம் நிறுவப்பட்டு, தேர் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. ஜூன் 16-ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, யாகசாலை அமைக்கும் பணிகள் ஆரம்பமானன. கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இன்று காலை 6.40 மணிக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, புனித கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்து, சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கப்பட்டது. 28 வருட இடைவெளிக்குப் பின் நடைபெற்ற இந்த விழா பக்தர்களின் பெரும் திரளுடன் நடைபெற்று, ஆன்மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Facebook Comments Box