சங்கரன்கோவிலில் திமுக சேர்மனுக்கு எதிராக அதிமுக-திமுக கவுன்சிலர்கள் கூட்டணி!
சங்கரன்கோவில் நகராட்சியில் திமுகவின் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரிக்கு எதிராக, அதிமுகவுடன் இணைந்து திமுக கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 30 வார்டுகள் கொண்ட நகராட்சியில் திமுக 9 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 12 இடங்களை கைப்பற்றியது. கூட்டணி ஆதரவில், தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணியின் துணை அமைப்பாளர் சரவணனின் மனைவி உமா மகேஸ்வரி சேர்மனாக பொறுப்பேற்றார்.
ஆரம்பத்திலிருந்தே உமா மகேஸ்வரிக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவின. இதில் சிலர் அதிமுக கவுன்சிலர்களுடன் சேர்ந்து உமா மகேஸ்வரிக்கு எதிராக திரும்பினர். இதனால் நிர்வாக நடவடிக்கைகளில் பல தடைகள் ஏற்பட்டன.
2023 டிசம்பரில் முதலாவது நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தபோதும், அமைச்சர்கள் தலையிட்டு அதை வாக்கெடுப்புக்கு வரவிடாமல் தடுத்தனர். தற்போது, நிர்வாக குறைபாடுகள், ஊழல் புகார்கள் மற்றும் பொதுமக்களுக்கு சேவைகள் செய்யாதது போன்ற காரணங்களை முன்வைத்து 24 கவுன்சிலர்கள் மீண்டும் தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர். இதற்கான வாக்கெடுப்பு ஜூலை 2 அன்று நடைபெறவுள்ளது.
திமுக தலைமை, அந்தந்த தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையை சமாளிக்கும் பொறுப்பு தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் இன்னும் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
வார்டுகளுக்கு சேவைகள் வழங்கப்படாததன் காரணமாக திமுக கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், அதிமுக கவுன்சிலர்கள் தங்களுடன் சேர்ந்து தற்போது போராட்டத்திற்கு வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், புனிதா என்ற திமுக கவுன்சிலரை புதிய சேர்மனாக முன்னிறுத்தும் முயற்சியும் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமை இதை அறியாது, பிரச்சனையை தீர்க்க மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைத்திருப்பதும் கேள்விக்குறி ஏற்படுத்துகிறது.
உமா மகேஸ்வரியின் கணவர் சரவணன், “பிரச்சனைக்கு நல்ல முடிவு வரும்” என தெரிவித்திருக்கிறார். மாவட்டச் செயலாளர் ராஜா, “சமாதானம் ஏற்பட்டு, உமா மகேஸ்வரியே தொடருவார்” என கூறியுள்ளார்.
அரசியல் சூழ்நிலை தேர்தலுக்கேற்ப மாற்றமடைந்துவரும் நிலையில், திமுக தலைமை இன்னும் எத்தனை அதிர்ச்சி சூழ்நிலைகளை சந்திக்கப்போகிறதோ என அரசியல் வட்டாரங்கள் சிந்திக்கின்றன.