பழனிசாமியின் பிரச்சார சுற்றுப்பயணம் ஜூலை 7–ல் கோவையில் தொடக்கம்

0

பழனிசாமியின் பிரச்சார சுற்றுப்பயணம் ஜூலை 7–ல் கோவையில் தொடக்கம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஜூலை 7-ம் தேதி கோவையில் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இந்த நிகழ்வில் பாஜக தலைவர்கள் கலந்து கொள்ளும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்த பழனிசாமியின் பயணம் சில காரணங்களால் பிற்போடப்பட்டது. தற்போது, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற இயக்கத்தின் கீழ், அவர் தனது முதல் கட்ட பிரச்சாரத்தை கோவையில் தொடங்கவுள்ளார்.

முதற்கட்ட பகுதிகள் மற்றும் அமைப்புகள்

முதற்கட்ட பயணத்தில், கோவை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் ஜூலை 21 வரை பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 7 அன்று மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தொழில்முனைவோர் சந்திப்பு, நம்பிக்கை உறுதி

சுற்றுப்பயணத்தின் போது தொழில்முனைவோர்களையும் தொழிலாளர்களையும் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து, அதிமுக ஆட்சி அமையும்போது அதற்கான தீர்வுகளை வழங்குவதாக பழனிசாமி நம்பிக்கை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு

அதிமுக-பாஜக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்த சுற்றுப்பயண தொடக்க விழாவுக்கு பாஜகவின் முக்கிய தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, ஹெச்.ராஜா மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரை அதிமுக தரப்பினர் அழைத்துள்ளனர். இதில் நயினார் நாகேந்திரன் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.

அழைப்பு வராத கூட்டணி கட்சிகள்

இதேவேளை, பாஜக கூட்டணியில் உள்ள தமாகா உள்ளிட்ட சில கட்சித்தலைவர்களுக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் பெருமளவு பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என்பதால், அவர்களின் கூடுகையை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு உறுதிப்படுத்தவும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் அதிமுகவினர் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளனர்.

Facebook Comments Box