விண்வெளியில் பயணம் செய்ய தயாராகும் 23 வயது ஆந்திர இளம் பெண்

0

23 வயதுடைய ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஜானவி தங்கேட்டி, 2029 ஆம் ஆண்டில் விண்வெளிப் பயணம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லு பகுதியைச் சேர்ந்த ஜானவி, பொறியியல் பட்டம் பெற்றவர். அவர், அமெரிக்காவில் உள்ள டைடன்ஸ் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதன் அடிப்படையில், 2029 மார்ச் மாதம் ஜானவி சுமார் 5 மணி நேரம் விண்வெளியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தை மேற்கொள்ளும் இந்தியப் பெண்களில் முதல் நபராக ஜானவி தேர்வாகியுள்ளார் என்பது முக்கிய சிறப்பாகும். விண்வெளிப் பயணத்திற்கு தேவையான பல்வேறு பயிற்சிகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதைப்பற்றி ஜானவி தங்கேட்டி சமூக ஊடகங்களில் தெரிவித்ததாவது:

“2026 முதல் 3 ஆண்டுகள், டைடன்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தொடர்ந்து பயிற்சி பெற இருக்கிறேன். இந்தக் காலத்தில், விண்வெளி இயக்கம், உருவகப்படுத்தல், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பலவகையான பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்த வாய்ப்பை வழங்கிய டைடன்ஸ் மையத்துக்கு எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பயிற்சியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதால், என் நாட்டுக்கும் பெருமை சேரும் என நம்புகிறேன். என் நீண்ட நாள் கனவு விரைவில் நனவாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.

Facebook Comments Box