இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதலின் போது ஈரானுக்கு ஆதரவு தெரிவித்த இந்தியா மற்றும் அதன் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது இந்திய தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம்.
மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதினோரு நாள்கள் நீடித்த மோதலின் போது, அமெரிக்கா இஸ்ரேலை ஆதரித்து ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களை தாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றம், பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்புடன் இடைநிறுத்தம் அடைந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “இஸ்ரேலும், அமெரிக்காவும் மேற்கொண்ட தாக்குதலுக்கு ஈரான் தாக்குப்பிடித்து வெற்றி பெற்றது. இந்த நேரத்தில், இந்திய தலைவர்கள், மக்கள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத தலைவர்கள், ஊடகப்பெயர்கள், சமூக சேவையர்கள் மற்றும் அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
அந்த பதிவின் முடிவில், “ஜெய் ஈரான்… ஜெய் ஹிந்த்…” என கூறப்பட்டுள்ளது.
மோடி – ஈரான் அதிபர் பேச்சு:
மேலும், ஜூன் 22ஆம் தேதி, ஈரான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெசெஷ்கியன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் அழைத்து உரையாடினார்.
பின்னர் வெளியிட்ட தனது சமூக வலைதளப் பதிவில், “ஈரான் அதிபருடன் நடத்திய உரையாடலில் தற்போதைய பிராந்திய சூழ்நிலை, சமீபத்திய பதற்றங்கள் குறித்து விவாதித்தோம். அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் ராஜதந்திர முயற்சிகள் முக்கியம் என்பதையும் வலியுறுத்தினேன். இந்தியர்கள் ஈரானிலிருந்து பாதுகாப்பாக திரும்ப உதவியதற்காக நன்றி தெரிவித்தேன். இரு நாடுகளும் வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்பை தொடர முடிவு செய்தோம்” என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.