345 அரசியல் கட்சிகளை நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
நாட்டெங்கும் பதிவு செய்யப்பட்டுள்ள 345 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை, தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று (ஜூன் 26) தெரிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு முதல் கடந்த ஆறு ஆண்டுகளாக எந்தவொரு தேர்தலிலும் பங்கேற்காமல் உள்ள இந்த 345 கட்சிகள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்டவை. பட்டியலில் இருந்து இவை நீக்கப்பட்டால், உரிய அனுமதி இல்லாமல் அலுவலகம் நடத்த முடியாது என்றும், எதிர்கால தேர்தல்களில் இந்தக் கட்சிகள் போட்டியிடும் உரிமை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, தேர்தல் ஆணையத்தில் 2,800-க்கும் அதிகமான அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பல கட்சிகள், விதிமுறைகளின்படி தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் உள்ளன. இதனை தொடர்ந்து, அந்தக் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன.