கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – மூன்று பேர் கைது
கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த ஜூன் 25-ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் 10.50 மணி வரை கல்லூரி வளாகத்திற்குள் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், கஸ்பா காவல் நிலையத்தில் மூன்று நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டதாக கொல்கத்தா காவல்துறையின் மூத்த அதிகாரி இன்று (ஜூன் 27, 2025) தெரிவித்தார்.
அவரது விளக்கத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனோஜித் மிஸ்ரா (30), பிரமித் முகர்ஜி (20), ஜைப் அகமது (19) ஆகியோர் என குறிப்பிடப்பட்டுள்ளனர். இதில் மனோஜித் மிஸ்ரா முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது; மற்ற இருவரும் தற்போதைய மாணவர்கள்.
மனோஜித் மற்றும் ஜைப் அகமது ஆகியோர் ஜூன் 26-ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு கைது செய்யப்பட்டனர். பிரமித் முகர்ஜி ஜூன் 27-ஆம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டார். இந்த மூவரின் மொபைல் போன்களும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சாட்சிகள் விசாரிக்கபட்டு, அவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் நடைபெற்ற இடத்தில் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இதற்குமுன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் ஒரு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஏற்பட்டது. அந்த வேதனையை மக்களும் மீள மறந்திருக்க, இப்போது திரும்பவும் இத்தகைய ஒரு கோர நிகழ்வு நடந்துள்ளதான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம், கொல்கத்தா நகரத்தில் பெண் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் எழுப்புகிறது.