பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள்: கடற்படை ஊழியர் விஷால் யாதவ் கைது

0

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள்: கடற்படை ஊழியர் விஷால் யாதவ் கைது

ஹரியானா மாநிலம் ரேவரியை சேர்ந்த விஷால் யாதவ், டெல்லி கடற்படை தலைமை அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தவர். இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பிற்கு கடற்படை ரகசியங்களை வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் உளவுத்துறையின் தகவலின்படி, சமீபத்தில் ஐஎஸ்ஐயின் உளவாளிகள் என சந்தேகிக்கப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ‘ப்ரியா சர்மா’ என்ற பெயரில் செயல்பட்ட ஒரு பெண்ணுடன் சமூக ஊடகங்களில் தொடர்பில் இருந்தனர். அந்த கணக்கை விசாரிக்கும்போது விஷால் யாதவ் தொடர்புடைய தகவல்கள் கிடைத்தன. இது அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் விஷால் கூறியதாவது:

5 ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் சேர்ந்தேன். ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபாடால் கடன் சிக்கலில் சிக்கினேன். அதே நேரத்தில் சமூக வலைதளத்தில் ‘ப்ரியா சர்மா’ என்ற பெண்ணிடம் அறிமுகம் ஏற்பட்டது. அழகிய புகைப்படங்களை பகிர்ந்த அந்தப் பெண், கடற்படை சார்ந்த தகவல்களை கேட்டார். ஆரம்பத்தில் தகவலுக்கு ₹6,000, பின்னர் முக்கிய தகவலுக்கு ₹50,000 கொடுத்தார். சிலமுறை கிரிப்டோகரன்சியிலும் பணம் அனுப்பினார். தற்போது வரை ₹2 லட்சம் பெற்றுள்ளேன்.

தொடர்ந்து வாட்ஸ்அப், பேஸ்புக், டெலிகிராம் வழியாக அவருடன் தொடர்பில் இருந்தேன். ஆரம்பத்தில் அவர் ஐஎஸ்ஐ உறுப்பினர் என்பது தெரியாமல் இருந்தது. ஆனால் பணம் தரும் விதத்தில் சந்தேகம் ஏற்பட்டு பின்னர் உண்மை புரிந்தது. பண ஆசையால் பெரும் தவறு செய்துவிட்டேன் என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

விஷால் யாதவுக்கு மனைவி சரண்யா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

பெண் உளவாளிகள் மற்றும் ஐஎஸ்ஐ பற்றிய உளவுத்துறை எச்சரிக்கை:

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பில் இருந்து அழகான மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கராச்சி, லாகூர் போன்ற நகரங்களில் அவர்களுக்கு இந்திய கலாசாரம், மொழி, உடை மற்றும் நடத்தை பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்கள் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை உருவாக்கி, இந்திய ராணுவம், பாதுகாப்பு துறைகள் மற்றும் அரசுத் துறை ஊழியர்களுடன் நட்பு வளர்க்கின்றனர்.

பின் வீடியோ அழைப்புகள், சில நேரங்களில் ஆடையின்றி தோன்றும் நடவடிக்கைகள் மூலம் ஊழியர்களை வலையில் வீழ்த்தி, ரகசிய தகவல்களை பெற்று ஐஎஸ்ஐக்கு வழங்குகிறார்கள். ஒரு பெண் உளவாளி சுமார் 50 பேரை சிக்க வைக்கும் திறன் பெற்றவர் என குறிப்பிடப்படுகிறது.

தற்போது ஐஎஸ்ஐ சார்ந்த நூற்றுக்கணக்கான பெண் உளவாளிகள் சமூக வலைதளங்களில் செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக அரசு மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box