தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

0

தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், கடந்த ஜூன் 25-ஆம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாக புகார் அளித்துள்ளார்.

மாணவியின் கூற்றுப்படி, தேர்வு விண்ணப்பம் தொடர்பான விபரங்களை அறிய, கல்லூரி ஊழியர் மனோஜித் மிஸ்ராவை சந்தித்தபோது, அவர் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்ததாகவும், மாணவி மறுத்த பிறகு, இரண்டு மாணவர்களை அழைத்து, பாதுகாவலர் அறைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் வலுக்கட்டாயமாக மாணவியை அங்கு அழைத்துச் சென்று, பாதுகாவலரை வெளியே அனுப்பிவிட்டு, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பாதுகாவலர் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கஸ்பா போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், மாணவர்கள் ஜைப் அகமது (19), பிரமித் முகர்ஜி (20), மற்றும் ஊழியர் மனோஜித் மிஸ்ரா (30) ஆகியோர் ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்டனர். மேலும், கல்லூரியின் பாதுகாவலராக உள்ள பினாகி பானர்ஜியும் நேற்று கைது செய்யப்பட்டார். இதன்மூலம் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது.

ஒரு போலீஸ் அதிகாரி இதுகுறித்து தெரிவித்ததாவது: “பாதுகாப்பை உறுதிசெய்வதற்குப் பதிலாக, பாதுகாவலர் பினாகி பானர்ஜி ஏன் அறையை விட்டு வெளியேறினார்? அவருக்கு உத்தரவிட்டது யார்? என்பதற்கான விளக்கங்களை அவர் வழங்க வேண்டும்” என்றார்.

இந்த வழக்கை விரிவாக விசாரிக்க, 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவின் மேலாண்மை, சிறப்பு கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த ஏசிபி பிரதிப் குமார் கோஷலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தா நகரிலேயே, அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் பெண் மருத்துவர் ஒருவரும் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற, 10 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இதுபோன்ற கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box