மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள மாலி நாட்டின் கேய்ஸ் பகுதியிலுள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“மேற்கு மற்றும் மத்திய மாலி பகுதிகளில் உள்ள பல ராணுவ தளங்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஜூலை 1ஆம் தேதி தீவிரவாத குழுக்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதே நாளில், கேய்ஸ் நகரத்தில் அமைந்துள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையை ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் தாக்கியதுடன், இந்தியாவைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்களை கடத்திச் சென்றனர்.
இந்தக் கடுமையான தாக்குதலை இந்திய அரசு கண்டிக்கின்றது. கடத்தப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் மீட்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு மாலி அரசை கேட்டுக்கொள்கின்றோம். நிலைமையை வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரிகள் மிக நுணுக்கமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களது மீட்பு தொடர்பாக பல்வேறு நிலைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள பமாகோவில் உள்ள இந்தியத் தூதரகம், மாலி அரசு அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. மேலும், கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினருடனும் தொடர் தொடர்பில் இருக்கின்றோம்,” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கெய்ஸில் அமைந்துள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையின்மீது நடத்தப்பட்ட தாக்குதலை, அல்கொய்தாவுடன் இணைப்பு கொண்ட “ஜமாத் நுஸ்ரத் அல் இஸ்லாம் வல் முஸ்லிமின்” எனும் அமைப்பினரே மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல், செனகல் எல்லைக்கு அருகிலுள்ள டிபோலி, கேய்ஸ் மற்றும் சாண்டேர் ஆகிய நகரங்களில் தொடர்ந்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் ஒரு பகுதியாக இருந்தது. அதே நாளில், மவுரித்தேனிய எல்லை அருகிலுள்ள பமாகோவின் வடமேற்கில் உள்ள நியோரோ டு சஹேல், கோகோய் மற்றும் மத்திய மாலியின் மொலோடோ, நியோனோ ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நிகழ்ந்தன.