தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா” விருது… பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டு மரியாதை

0

கானாவின் உயரிய அரசாங்க விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா” விருது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இரண்டு நாள் அரசு பயணமாக கானாவுக்குச் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மகாமா நேரடியாக விமான நிலையத்தில் வரவேற்றார். இந்நிலையில், இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், அந்த நாட்டின் மிகவும் முக்கியமான விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா” விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தார் அதிபர் மகாமா.

இந்த விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, “இந்திய பிரதமராக எனக்கு கானாவின் தேசிய விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. கானா அதிபர் மகாமாவுக்கும், அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த அங்கீகாரத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்,” என கூறினார்.

மேலும் அவர், “இந்த விருதை, நமது இளைஞர்கள் கொண்டிருக்கும் உயர்ந்த கனவுகளுக்கும், அவர்களுக்கான ஒளிமிகு எதிர்காலத்திற்கும், நமது சிறப்பான பாரம்பரிய கலாச்சாரமும், இந்தியா – கானா இடையிலான நீண்டகால வரலாற்றுச் சங்கிலியும் அர்ப்பணிக்கிறேன்” என்றார்.

பின்னர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த விருது எனக்கு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் புதிய பொறுப்பை அளிக்கிறது. கானாவுக்கான என் வரலாற்று சிறப்புமிக்க அரசு பயணம், இந்தியா-கானா உறவுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை தரும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “இது பிரதமர் மோடிக்கு கிடைத்த 24வது சர்வதேச விருது. 140 கோடி கனவுகளின் பிரதிநிதியாக, தொடர்ச்சியான தொலைநோக்குடன் நம் நாட்டை வழிநடத்தும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது என்பது பெரும் கௌரவம். இது ஒவ்வொரு இந்தியருக்கும் உரிய அங்கீகாரம்” என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box