தெற்கு காஷ்மீரின் இமயமலைத் தொகுதியில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க 38 நாட்கள் நீடிக்கும் அமர்நாத் யாத்திரை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான யாத்திரை நேற்று ஆரம்பமானது. பக்தர்கள் பால்தால் மற்றும் நுன்வான் முகாம்களில் இருந்து பயணத்தை தொடங்குகின்றனர். பால்தால் வழியாக செல்ல வேண்டுமெனில் 14 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். நுன்வான் முகாமிலிருந்து பஹல்காம் வழியாக செல்லும் பாதை 48 கிலோமீட்டர் நீளமாகும். இந்த இரு முகாம்களிலிருந்தும் நேற்று பக்தர்கள் யாத்திரையைத் தொடங்கினர். “பம் பம் போலே” எனக் கோஷமிட்டவாறு அவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
ஜம்முவின் பகவதி நகரில் இருந்து 5,892 பக்தர்களுடன் பயணித்த முதல் குழுவின் யாத்திரையை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து துவக்கி வைத்தார். மதியம் காஷ்மீரை அடைந்த பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், உள்ளூர் மக்களும் வரவேற்பளித்தனர். இவர்கள் பனிலிங்கத்தை தரிசிக்க அமர்நாத் குகை கோயிலுக்குச் செல்கின்றனர். யாத்திரையின் தொடக்கத்தையொட்டி பக்தர்கள் பயணிக்கும் வழிமுழுவதும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ட்ரோன்களின் உதவியுடன் யாத்திரை வழிகள் கண்காணிக்கப்படுகின்றன.