நிபா வைரஸ் பாதிப்பு: இரண்டு பெண்களுக்கு உறுதி, சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தல்
கேரளத்தில், 18 வயதுடைய இளம்பெண் மற்றும் 38 வயதுடைய பெண்ணுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும், பிற சுகாதார ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், மூளைக்காய்ச்சலுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுடன், பின்னர் கோழிக்கோட்டில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஜூலை 1ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவரது உடலுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு நிபா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதேபோல், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணும் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதையடுத்து பெரிந்தல்மன்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது நிபா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தொற்று புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இருவருக்கும் நிபா தொற்று உறுதியாகவுள்ளதால், அவர்களுடன் நேரில் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்படுவதுடன், சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசார் வழிமுறைகளை கடைபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்ததாவது: “நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னிலையிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மலப்புரம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் 26 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்புடையவர்களை கண்டறிய போலீசாரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் ஏற்பட்ட சந்தேகமான மரணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்,” என்றார்.