இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, வெள்ளம் காரணமாக 69 பேர் உயிரிழப்பு – ₹700 கோடிக்கு சேதம்
இமாச்சலப் பிரதேசம் கடுமையான இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கனமழை, மேக வெடிப்பு மற்றும் வெள்ளம் காரணமாக 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ₹700 கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். இந்த நிலைமைக்கு “போர் போன்ற பேரிடர்” என்று வர்ணித்த அவர், மாநிலம் முழுவதும் அதனை எதிர்த்து கடுமையாக போராடி வருவதாக கூறினார்.
சிம்லாவில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதம் ₹5,000 நிதி உதவி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும், அவர்களுக்கான உணவு மற்றும் ரேஷன் விநியோகம் முழுமையாக செய்யப்படும்,” என்றார்.
இந்த பேரிடரால் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர், 37 பேர் மாயமாகியுள்ளனர், மேலும் 110 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 300 சாலைகள் மூடப்பட்டுள்ளன, 790 நீர் வழங்கல் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, 332 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. இது பருவமழையின் தொடக்கத்திலேயே ஏற்பட்ட அபூர்வமான பேரழிவாகும் என கூறினார்.
கடந்த 15 நாட்களில் மட்டும் 14 மேக வெடிப்புகள் நடந்துள்ளன எனவும், இவற்றின் காரணங்களை ஆராய்ச்சி மூலம் கண்டறிவது முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவியைப் பெற்றுள்ளதையும் அவர் கூறினார். ஹெலிகாப்டர்களின் உதவியுடன் நிவாரணப் பொருட்கள் விரைவில் விநியோகிக்கப்படும் என்றும், மத்திய குழுவொன்று மாநில சேத மதிப்பீடுக்காக வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“பாரம்பரிய அறிவை அடிப்படையாகக் கொண்டு சாலைகள் அமைக்க வேண்டும். மலைப்பகுதிகளின் நிலத்தோற்றம் குறித்து விளக்கம் இல்லாதவர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கக் கூடாது. அப்படி செய்தால்தான் இவ்வாறு இயற்கை பேரழிவுகளின் போது அதிக சேதம் ஏற்படுகிறது,” என்றும் முதல்வர் சுகு அறிவுறுத்தினார்.