மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடும் குகி ஆயுத அமைப்புகளுடன் 2008-ஆம் ஆண்டு செய்யப்பட்ட அமைதி உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு மத்திய அரசை 4 மணிப்பூர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தக் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பிய கூட்டு கடிதத்தின் மூலம், மணிப்பூர் பழங்குடியினர் மன்றம், மெய்த்தி கூட்டமைப்பு, மலைவாழ் நாகா ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தடோ இன்பி மணிப்பூர் (TIM) ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ளன.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
குகி தேசிய அமைப்பு (KNO) மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணி (UPF) ஆகிய அமைப்புகள் 2008-ம் ஆண்டு கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாதுகாப்புப் படைகள் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில், இந்த அமைப்புகள் இனி எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபடக் கூடாது, கொலை, காயப்படுத்தல், கடத்தல், மிரட்டல், பதுங்கிய தாக்குதல், சட்டவிரோத வரி வசூல் போன்ற செயல்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் முயற்சிக்கு இவ்வமைப்புகள் ஆதரவளிக்க வேண்டியது அவசியம் என்றும், இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் அதுதான் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால், ஒப்பந்தத்தின் நடைமுறைகள் மீறப்பட்டால் பாதுகாப்புப் படைகள் நடவடிக்கை எடுக்கலாம் என இருந்தபோதும், KNO, UPF ஆகியவை தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபடுவதை மாநில அரசு தடுக்க முடியாமல் உள்ளது. இதற்கு முக்கிய காரணம், நடவடிக்கைகள் எடுக்க, கூட்டுக் கண்காணிப்பு குழுவின் பரிந்துரை அவசியம் என்பதுதான். ஆனால் அந்தக் குழுவில் KNO, UPF அமைப்புகளே முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதனால், ஒப்பந்தத்தின் தன்மை காரணமாக, இந்த அமைப்புகள் மற்றும் அவற்றின் கிளை அமைப்புகள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, இவ்வமைதி ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்கக் கூடாது என்றும், அதனை முற்றிலும் நிறைவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.