ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 3 நாடுகள் எதிரியாக இருந்தன – ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங்
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஃபிக்கி நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங், ஆபரேஷன் சிந்தூர் குறித்து கூறியதாவது:
பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் ஆதரவு உள்ள தீவிரவாதிகள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பாகிஸ்தானில் செயல்பட்டுவந்த பயங்கரவாத முகாம்களை அழிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 21 முகாம்கள் அடையாளம் காணப்பட்டன. இறுதியாக, முக்கியமான 9 முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா–பாகிஸ்தான் இடையே நான்கு நாட்கள் இடைவெளியில்லாமல் போர் நடந்தது. எங்கள் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் மட்டுமல்ல, சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளையும் நாம் எதிர்கொண்டோம். பாகிஸ்தான் முன்னணியில் இருந்தது. அதன் பின்புலத்தில் சீனா இருந்தது. சீனாவிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேவையான அனைத்து ஆதரவுகளும் வழங்கப்பட்டன.
பல வருடங்களாக, பாகிஸ்தான் ராணுவத்திற்கு சீனாவால் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது பாகிஸ்தான் பயன்படுத்தும் ஆயுதங்களில் 81 சதவீதம் சீனாவால் தயாரிக்கப்பட்டவை. அந்த போர் நேரத்தில் சீன ஆயுதங்கள் பாகிஸ்தான் ராணுவம் மூலம் பயன்படுத்தப்பட்டு சோதிக்கப்பட்டன. சொல்வதானால், சீனாவிடமிருந்து கடன் பெற்ற ஆயுதங்களை கொண்டு இந்தியாவை தாக்க பாகிஸ்தான் முயற்சித்தது.
போர் நடைபெற்ற காலத்தில், இந்திய படைகளின் நிலைமை குறித்து தகவல்களை சீனா, பாகிஸ்தானுக்கு பகிர்ந்தது. டிஜிஎம்ஓ அதிகாரிகள் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த நேரத்தில், சீனா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை வழங்கியது.
மேலும், துருக்கி பாகிஸ்தான் ராணுவத்திற்கு நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வழங்கியது. இவை இந்தியா மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டன. ஒரே நேரத்தில் பல திசைகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால் இந்தியாவின் மூன்று படைப்பிரிவுகளும் ஒன்றிணைந்து எதிரிகளை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தின.
ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவுக்கு பல முக்கிய பாடங்களை கற்றுத்தந்தது. குறிப்பாக, வான்வழிப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும். ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவழியில் அழிக்கும் திறனை மேம்படுத்த வேண்டிய தேவை உருவாயிற்று, என்று அவர் கூறினார்.