மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள மாலி நாட்டில், ஜமாத் நுஸ்ரத் அல் இஸ்லாம் வல் முஸ்லிமின் (JNIM) என்ற பெயரில் செயல்படும் ஒரு தீவிரவாதக் குழு, அங்கு பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு அல்-காய்தா என்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புடன் நெருக்கமான தொடர்பு உள்ளது. JNIM அமைப்பின் உறுப்பினர்கள், மாலி நாட்டில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைதிப் படையினரையும், மாலியின் பாதுகாப்புப் படையினரையும், அத்துடன் அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு மக்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மேற்கு மாலி பகுதியில் உள்ள காயெஸ் என்ற பகுதியில் செயல்படும் ஒரு சிமெண்ட் தொழிற்சாலை வளாகத்துக்குள் புகுந்த இந்த தீவிரவாதக் குழுவினர், அங்கு பணியாற்றியிருந்த சில வெளிநாட்டு தொழிலாளர்களை கடத்திச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடத்தப்பட்டவர்களில் மூவர் இந்தியர்களாக இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களில் ஒருவர், ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வெங்கட்ராமன் என்பவராகும். இவர் ப்ளூ ஸ்டார் என்ற நிறுவனத்தின் பணிக்காக, ஆறுமாத காலச்சமய வேலைக்கு மாலியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கடத்தப்பட்ட இந்தியர்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்களை விரைவில் மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவும், மாலி நாட்டின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.