பிஐஎஸ் தரம் பெற்ற தலைக்கவசங்களையே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தல்

0

பிஐஎஸ் தரம் பெற்ற தலைக்கவசங்களையே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது

இந்தியாவின் இருசக்கர வாகன ஓட்டிகள் அவர்கள் பாதுகாப்புக்காக, பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே அணிய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி அறிவுரை வழங்கியுள்ளது.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவுத்துறை மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவிலேயே சுமார் 21 கோடிக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சாலைகளில் இயங்கி வருகின்றன. இது கணிசமான எண்ணிக்கையைக் கொண்டதாக இருப்பதால், அந்த வாகனங்களை ஓட்டும் நபர்களின் உயிர் பாதுகாப்பு மிக முக்கியத்துவம் பெறுகிறது. மோட்டார் வாகன சட்டம், 1988-இன் படி, இருசக்கர வாகன பயணிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். மேலும், அந்த தலைக்கவசங்கள் தரத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டவை ஆகவேண்டும்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தரமற்ற மற்றும் சான்றளிக்கப்படாத தலைக்கவசங்கள், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய அம்சங்களை புறக்கணிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது, சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்புகளை அதிகரிக்கச் செய்யக்கூடும். இதற்காக, 2021 முதல் ஒரு புதிய தரக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஐஎஸ் 4151:2015 என்ற தரவிதிகளின் அடிப்படையில் BIS சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே வாகன ஓட்டிகள் அணிய வேண்டும் என்றும், அவற்றில் ISI முத்திரை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 2025 நிலவரப்படி, இந்தியாவில் 176 உற்பத்தியாளர்கள் BIS சான்றளிக்கப்படப்பட்ட தலைக்கவசங்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ளனர். இருப்பினும், சாலையோர கடைகளில் விற்கப்படும் தலைக்கவசங்களில் பலவற்றிற்கு இந்த சான்றிதழ் இல்லை. அவை தரமற்றவையாக இருக்கக்கூடும் என்பதால், அவை விபத்துகளில் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதில் தோல்வியடைய வாய்ப்பு உள்ளது.

இந்த சூழ்நிலையை சரிசெய்யும் நோக்கில், பிஐஎஸ் அமைப்பு தொழிற்சாலைகள் மற்றும் சந்தைகளில் திட்டமிட்ட கண்காணிப்புகளை மேற்கொள்கிறது. இந்த கண்காணிப்பின் மூலம் தரச்சீட்டற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி செய்யப்படும் சூழ்நிலைகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு தரமற்ற தயாரிப்புகளை சந்தையிலிருந்து நீக்கும் முயற்சிகள், வாகனப் பயணங்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் இருக்கும். மேலும், தரமான பாதுகாப்பு உபகரணங்களை மக்களிடையே ஊக்குவிக்கும் பணியையும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மேற்கொண்டு வருகிறது” என அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box