தலாய் லாமா மரபு குறித்து சீன தூதரின் கூற்று – இந்திய வெளியுறவுத் துறை பதிலளிப்பு
தலாய் லாமா மரபை முடிவுக்கு கொண்டுவரும் உரிமை 14-வது தலாய் லாமாவுக்கு இல்லை என்றும், அந்த மரபு கடந்த 700 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு மதச் சடங்காக இருப்பதால், இதை ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் முடிவுசெய்ய முடியாது என்றும், இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திபெத்திய புத்த மதத்தில், தலாய் லாமா மரபு ஏற்கனவே ஏழு நூற்றாண்டுகளுக்கு மேல் நடைமுறையில் உள்ளது. தற்போதைய 14-வது தலாய் லாமா, இந்த நீண்ட மரபின் ஒரு பகுதியாகவே இருக்கிறார். இந்த மரபை தொடரலாமா அல்லது நிறைவு செய்யலாமா என்பதைக் குறித்து ஒருபுறமாகவே யாரும் முடிவெடுக்க முடியாது. இந்த மரபு அவரிடம் இருந்து தொடங்கவில்லை என்பதுபோலவே, அவரிடமே முடிவடையவும் முடியாது. இதை நீட்டிக்கவோ நிறுத்தவோ அவருக்கு தனித்து உரிமையில்லை” எனக் கூறினார்.
இந்த உரையின் பின்னணியில், இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
“தலாய் லாமா மரபு அல்லது இதுபோன்ற மத சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இந்திய அரசு எந்த வகையிலும் கருத்து தெரிவிக்கவில்லை. தலாய் லாமா அந்த மரபைத் தொடர்வதற்கான தனது எண்ணத்தை முன்வைத்திருப்பதை நாங்கள் கவனித்துள்ளோம். ஆனால், மத நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் குறித்த விவகாரங்களில் இந்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்கவோ, மதிப்புரை செய்யவோ இல்லை” என்றார்.
இது எதற்கான பின்னணி?
திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்து, தற்போது இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில் வசித்து வருகிறார். இந்நிலையில், தலாய் லாமா தனது 90வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அதற்கான முன்னோட்டமாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், “எனது மறைவுக்குப்பின் தலாய் லாமா மரபு தொடரும். அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உண்டு” என்று குறிப்பிட்டிருந்தார்.
இத்தகவலுக்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “தலாய் லாமா உள்ளிட்ட புத்த மத தலைவர்களை தேர்வு செய்யும் செயல்முறைகள், சீன அரசின் ஒப்புதல் மற்றும் அங்கீகாரம் இல்லாமல் செல்லாது. அதில் அரசு பங்கு அவசியம்” என்றார்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து வெளியிட, “அடுத்த தலாய் லாமா யார் என்பது பற்றிய முடிவை, அதற்காக உள்ள அமைப்பும், தலாய் லாமாவின் விருப்பத்தின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று அவரை மதிக்கும் மக்கள் நம்புகின்றனர். இந்த மரபை தீர்மானிக்கும் உரிமை தலாய் லாமாவுக்கும், அந்த மதசடங்குகளுக்கும் மட்டுமே உள்ளது. மற்ற எந்த அமைப்புக்கும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும்படி சீன அரசு மீண்டும் கருத்து தெரிவித்தது. அதில், “திபெத் தொடர்பான விவகாரங்களை இந்தியா உள்நாட்டுப் பிரச்சனைகளில் நுழைவதற்காக பயன்படுத்தக்கூடாது. இதனால், இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் முடிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் இந்தியா அதைக் தவிர்க்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தது.