கருணாநிதியின் விருப்பத்துக்கு முரணானது… ‘கனவு இல்லம்’ அரசாணை திருத்தத்துக்கு ஐகோர்ட் கண்டனம்

0

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கிய அரசின் நடவடிக்கையை பின்னர் ரத்து செய்தது இலக்கிய உலகை அவமதிக்கும் செயல் என சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

கலைஞர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம் மற்றும் சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகளை பெற்ற எழுத்தாளர்களை மதிப்பளிக்கும் வகையில், 2022-ஆம் ஆண்டு அரசு ‘கனவு இல்லம்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இதன்படி, “கல்மரம்” நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழகத்தின் முதற் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் 1,409 சதுர அடி வீடு வழங்கப்பட்டது.

பின்னர், திலகவதி ஏற்கனவே வீட்டு வசதி வாரியத்தில் வீடு பெற்றுள்ளார் என்ற காரணத்தால், அவருக்கு வழங்கப்பட்ட வீடு ரத்து செய்யப்படுவதாக 2024-ஆம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து திலகவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், “ஏற்கனவே சொந்த வீடு இருந்தாலும், ‘கனவு இல்லம்’ திட்டத்தில் வீடு பெற தகுதி உண்டு என 2022 அரசாணை கூறுகிறது. ஆனால் புதிய அரசாணையில் அந்த உரிமை மறுக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள் ராஜ், “கவிஞர் மு.மேத்தா உள்ளிட்டோருக்கும் வீடு வழங்கல் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

வழக்கை பரிசீலித்த நீதிபதி, “வீடு வழங்க வேண்டுமென்று யாரும் கேட்டதில்லை. அரசே தானாக வழங்கி, பின்னர் அதைப் பிடுங்குவது, உயரிய விருதுகளை பெற்ற எழுத்தாளர்களை அவமதிப்பதற்கே ஒப்பானது. இது ஆழ்ந்த வருத்தத்துக்கிடமானது” என்று கண்டித்தார்.

மேலும், “கருணாநிதி தமிழுக்காக வாழ்ந்தவர்களை என்றும் மதித்தவர். தற்போதைய அரசின் திருத்தம் அவரது எண்ணத்துக்கு முரணானது. இந்த அரசு அவருடைய எண்ணங்களை மீறாது என நம்புகிறேன். திருத்தம் செய்யப்படும் என்றாலும், அது முன்நாள் தேதியிட்டு அமல்படுத்தக்கூடாது” என தெரிவித்த நீதிபதி, கவிஞர் மு.மேத்தா தொடரவுள்ள வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரிக்கப்படும் எனக் கூறி, விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Facebook Comments Box