“திமுக ஆட்சிக்கு எதிராக இருப்பவர்கள் ஒரே அணியில் திரண்டிட வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அழைத்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“மடப்புரம் கோயிலில் காவலராக பணியாற்றிய அஜித் குமார் கொலை வழக்கை முதலில் வெளிச்சத்தில் கொண்டது நான்தான். பின்னர் தான் பிற அரசியல் கட்சிகள் அதில் ஈடுபட்டன. தற்போது பலரும் அஜித் குமார் வீட்டிற்கு சென்று உள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வரே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியவர். ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று கூறும் முதலவரின் கூற்றால் யாருக்கு நன்மை, யாருக்கு இழப்பு என்பதை மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியம். திமுக ஆட்சி மீதான எதிர்ப்பில் இருக்கும், விஜய் உள்ளிட்ட அனைவரும் ஒரே அணியில் சேரவேண்டும்.
திமுக கூட்டணியில் நான் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் எதையும் செய்ததில்லை. முதலவர் ஸ்டாலின், திருமாவளவன், செல்வப்பெருந்தகை என யாராக இருந்தாலும் எல்லோருடனும் நல்லுறவில் பழகி வருகிறேன். குழப்பம் ஏற்படுத்துவது என் நோக்கம் அல்ல. ஆனால், முதலவர் தனது பொறுப்புகளை சரியாக செய்யாதபோது, ஒரு கட்சித் தலைவராக எனது கடமையைச் செய்துவருகிறேன்” என்றார் அவர்.