மடப்புரம் காவலர் கொலை விவகாரம்: அதிகாரியின் பெயரை வெளியிட முதல்வர் ஸ்டாலின் தயங்கக் கூடாது – நயினார் நாகேந்திரன்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் காவலரால் தாக்கப்பட்டு உயிரிழந்த கோயில் காவலர் அஜித் குமாரின் குடும்பத்தினரை இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆறுதல் வழங்கினார். இதையடுத்து ₹5 லட்சம் நிதி உதவியையும் வழங்கிய அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“திமுக ஆட்சி வந்த பின் கடந்த 4 ஆண்டுகளில் 23 லாக்-அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அஜித் குமார் சம்பவம் 24-வது லாக்-அப் மரணம்.
இந்த விவகாரத்தில், எப்ஐஆர் பதிவு செய்யாமல், ஒருவர் புகார் அளித்ததை அடுத்து அஜித்தை போலீஸ் நிலையத்தில் அடித்துள்ளனர். அவரது சகோதரர் தலையிட்ட பின்னரே அவர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.
பின்னர், சிறப்பு காவல்படையினர் இரு நாட்கள் அவரை வைத்து அடித்துள்ளனர். தலைமைச் செயலகத்திலிருந்து ஒரு அதிகாரியின் அழுத்தம் காரணமாகவே இது நடந்ததாக கூறப்படுகிறது. இதே அழுத்தத்தின் பேரிலேயே 6 போலீசார் கூட்டாக அஜித்தை அடித்துள்ளனர்.
அவரது உடலில் 23 இடங்களில் காயம், மூளை, இருதயம், கல்லீரலில் ரத்தக்கசிவு, மண்டையில் பிளவு போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. சிகரெட்டால் மூன்று இடங்களில் சுட்டதற்கான அடையாளங்களும் இருந்தன.
இதற்கான காரணம், அதிகாரி ஒருவரின் ஒளிந்த அழுத்தம் தான். இந்த கொலைக்கான உண்மை வெளிவந்தது பாஜக காரணமாகத்தான்.
அரசு வழங்கிய நிவாரணம் முகமூடி நடவடிக்கையே. வேலை வாய்ப்பு 80 கிமீ தூரத்தில், வீட்டுமனை 4 கிமீ தள்ளி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் இதை ஒட்டுமொத்தமாகவே புறக்கணிக்கிறார்.
பிரேத பரிசோதனை அறிக்கையிலும் இறப்புக்கு முன் இருதயம் பாதிக்கப்பட்டிருந்ததோடு, பல்வேறு காயங்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
சம்பவத்தின் வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் என்ற இளைஞருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அவருடைய பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.
இதே மாவட்டத்தில், 7 வயது சிறுவன் ஒருவன் பள்ளிக்கு சென்றுவிட்டு உடலில் காயங்களுடன் மரணம் அடைந்திருக்கிறார். இது போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தொடர்கின்றன.
இந்து அறநிலையத்துறை அதிகாரியை விசாரிக்க வேண்டும். இந்த கொலையில் தொடர்புடையவர்கள் அனைவரும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.
காவல்துறையின் தாக்குதலுக்குப் பின் இந்த கொலை நடந்தது. இது குறித்து தலைமைச் செயலகத்திலிருந்து அழுத்தம் கொடுத்தவர் யார் என்பதை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
சாத்தான்குளம் வழக்கு ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருக்க, ஞானசேகரன் வழக்கு ஐந்து மாதத்தில் தீர்க்கப்பட்டது. பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதும் வெளிவர வேண்டும்.
எனவே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை மற்றும் நியாயமான நீதிபதி விசாரணை தேவைப்படுகிறது.
சிங்கம்புணரியில் மர்மமாக உயிரிழந்த 7 வயது மாணவனின் மரணம் மற்றும் இத்தகைய பல சம்பவங்கள் தமிழக மக்களிடையே ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்துகின்றன.
இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேலும் நடக்காத வகையில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க, பாலியல் குற்றங்களை தடுக்கவும், பள்ளி-கல்லூரிகளில் போதைப்பொருள் புழக்கத்தை தடை செய்யவும் அரசு முன்வர வேண்டும். தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்,” என்றார் நயினார் நாகேந்திரன்.