அம்மாபாளையத்தில் சாலை வசதிகள் கேள்விக்குறியாகும் நிலையில் – அண்ணாமலை விமர்சனம்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடங்கிய பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு வரை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய ரூ.5,886 கோடியில் எத்தனை சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னுடைய எக்ஸ் (முன்பு ட்விட்டர்) கணக்கில் வெளியிட்ட செய்தியில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள அம்மாபாளையம் கிராமம், பவானி ஆற்றால் இரண்டு பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளதாகவும், வெள்ளத்தின் போது பரிசல் சேவை முடங்குவதால் மக்கள் சுமார் 8 கி.மீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
அவசர மருத்துவ தேவைகளுக்காக பயணிக்கும் நோயாளிகள், சாலையின்மை காரணமாக சிகிச்சைக்கு தாமதமாகச் சென்றதனால் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்றும், இந்த பிரச்சனையை தீர்க்கப் பல ஆண்டுகளாக உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைகள் எத்தனையோ முறை முதல்வருக்கும், அந்தியூர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏவுக்கும் தெரிவிக்கப்பட்டாலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோல், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கிராம சாலை வசதிகள் இன்னும் கிடைக்காமல் இருப்பதாகவும், ஆனால் தமிழக அரசு ‘நாம் 100 சதவீதம் சாலை அமைத்துவிட்டோம்’ என பொய்யான பிரகடனங்கள் வெளியிடுவதாகவும் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு வழங்கும் திட்டங்களுக்கு “முதல்வரின் கிராம சாலைகள் திட்டம்” என பெயர் மாற்றி அரசாணை வெளியிட்டு, அதனை திமுக அரசு உள்நாட்டுத் திட்டமாகக் காட்டும் முயற்சி மட்டுமே செய்கிறது என்றும், அந்தத் திட்டத்தின் கீழ் உண்மையில் எத்தனை சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றும் 2025-ஆம் ஆண்டில் கூட, பல கிராம மாணவ, மாணவியர்கள் பரிசலிலேயே பள்ளிக்குச் சென்று வர வேண்டிய நிலை தொடர்கிறது என்பதுவே, தமிழகத்தில் அடிப்படை வசதிகள் எவ்வளவு பின்தங்கியுள்ளன என்பதைத் தெளிவாக காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.