நடுத்தர வர்க்க மக்களுக்கு விரைவில் நன்மை கிடைக்கும் வகையில் ஜிஎஸ்டி விகிதங்களை மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சலுகை அளிக்க அரசாங்கம் முனைப்புடன் செயல்படுகிறது.
இதற்கிணங்க, 12 சதவீத ஜிஎஸ்டி விகிதத்தை முற்றிலும் நீக்குவது அல்லது தற்போது 12 சதவீதம் விகிதத்தில் உள்ள சில முக்கிய பொருட்களை 5 சதவீதத்திற்கு மாற்றுவது போன்ற பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.
இந்த மாற்றம் நடுத்தர மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும். குறிப்பாக, பற்பசை, பல் பொடி, குடைகள், தையல் இயந்திரங்கள், பிரஷர் குக்கர்கள், சமையல் பாத்திரங்கள், அயன்பாக்ஸ், கீசர்கள், சலவை இயந்திரங்கள், சைக்கிள்கள், ரூ.1,000 மதிப்புள்ள தயார் ஆடைகள், ரூ.500 முதல் ரூ.1,000 வரை விலை உள்ள காலணிகள், எழுதும் உபகரணங்கள், தடுப்பூசிகள், பீங்கான் பாத்திரங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் போன்ற பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், மேலே பட்டியலிடப்பட்ட பல பொருட்கள் பொதுமக்களுக்கு மலிவாக கிடைக்கும். அனைவருக்கும் ஏற்றவாறு, எளிமையாக செயல்படும் ஜிஎஸ்டி அமைப்பை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.