இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக தயாராகும் இந்தப் படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ், மற்றும் அனுமனாக சன்னி தியோல் நடிக்கின்றனர். ராவணனின் மனைவி மண்டோதரியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.
படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. முதல் பகுதி 2026ஆம் ஆண்டு தீபாவளி விழாவுக்காகவும், இரண்டாவது பகுதி 2027 தீபாவளிக்காகவும் வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் இந்தியாவின் இசைஞானி ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைக்க உள்ளனர் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘லயன் கிங்’, ‘டார்க் நைட்’, ‘இன்செப்ஷன்’, ‘இண்டெர்ஸ்டெல்லார்’ போன்ற பிரபல ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்த ஹான்ஸ் ஸிம்மர், சமீபத்தில் வெளியான ‘எஃப்1’ திரைப்படத்திலும் சிறந்த இசையை வழங்கினார்.
இந்தியா சார்ந்த திரைப்படத்திற்கு ஹான்ஸ் ஸிம்மர் இசையமைக்கும் இது முதல் முறை ஆகும். ரஹ்மானுக்கும் ஹான்ஸ் ஸிம்மருக்கும் நீண்டகால நட்பு உள்ள நிலையில், இருவரும் சேர்ந்து இசையமைப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தற்போது வெளியான டீசரில் இடம்பெறும் பின்னணி இசைக்கும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.