இந்திய யு19 அணி – இங்கிலாந்து யங் லயன்ஸை 231 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
இங்கிலாந்தின் மண்ணில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா யு19 அணி, இங்கிலாந்து யங் லயன்ஸ் அணியை 231 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர், லாரி ஓட்டுநராக பணியாற்றும் ஒருவரின் மகனான 18 வயதுடைய ஹர்வன்ஷ் சிங் பங்காலியா. அவரது தாக்கம் ஏற்படுத்தும் பேட்டிங் மூலம் தற்போது பலரது கவனத்தை பெற்றுள்ளார்.
தற்போது, இந்தியாவின் மூன்று அணிகள் – ஆடவர் சீனியர் அணி, மகளிர் அணி மற்றும் யு19 அணி – ஒரே நேரத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றன. இதில் ஆண்டர்சன்-சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி தோல்வியடைந்தது. இந்திய பெண்கள் அணி ஜூன் 28 ஆம் தேதி தொடங்கும் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்த சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே தலைமையில், இந்திய யு19 அணி இங்கிலாந்துக்கு பயணம் செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியா மற்றும் இங்கிலாந்து யு19 அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகள் ஜூன் 27 முதல் ஜூலை 23 வரை நடைபெறவுள்ளன.
பயிற்சி ஆட்ட வெற்றி:
இந்த தொடருக்கு முன்னதாக, இந்திய யு19 அணி இங்கிலாந்து யங் லயன்ஸ் அணியை எதிர்த்து ஒரு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது. இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை லஃவ்பெரா நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 444 ரன்கள் குவித்தது.
இந்த இன்னிங்ஸில் ஹர்வன்ஷ் பங்காலியா வெறும் 52 பந்துகளில் 103 ரன்கள் அடித்தார். அவரது அட்டகாச பேட்டிங்கில் 8 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். ராகுல் குமார், கனிஷ்க் சவுகான் மற்றும் ஆர்.எஸ்.அம்பிரிஷ் ஆகியோரும் அரைசதங்களை பெற்றனர். பின்னர் மிகப்பெரிய இலக்கை நோக்கிச் சென்ற இங்கிலாந்து அணி 231 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஹர்வன்ஷ் பங்காலியா – யார் இவர்?
18 வயதான ஹர்வன்ஷ் குஜராதின் காந்திதாம் பகுதியில் பிறந்தவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகும் இவர் வலதுகை ஆட்டக்காரர். கிரிக்கெட் பயிற்சியை தனது சொந்த மாநிலத்தில் துவக்கியவர், தற்போது அவரது குடும்பம் கனடாவில் வசித்து வருகிறது. அங்கு அவரது தந்தை லாரி ஓட்டுநராக பணியாற்றுகிறார். சவுராஷ்டிரா மாநில இளம் அணிக்காக பல்வேறு வயது பிரிவுகளில் கிரிக்கெட் விளையாடியுள்ள ஹர்வன்ஷ், கடந்த செப்டம்பரில் ஆஸ்திரேலிய யு19 அணிக்கு எதிராக தனது சர்வதேச இளையோர் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார்.