19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவைச் சேர்ந்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி அதிவேக சதமடித்து புதிய சாதனை

0

19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவைச் சேர்ந்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி அதிவேக சதமடித்து புதிய சாதனை ஒன்றை எட்டியுள்ளார்.

இங்கிலாந்து யு-19 அணியை எதிர்த்து சனிக்கிழமை நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை நிறுவினார்.

இந்த ஆட்டத்தில், வைபவ் சூர்யவன்ஷி 52 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம், 2013-ல் 53 பந்துகளில் சதம் அடித்த பாகிஸ்தானின் கம்ரான் குலாமின் சாதனையை முறியடித்தார். அவர் மொத்தம் 78 பந்துகளில் 143 ரன்கள் எடுத்தார், இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 183.33 ஆகும். இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 363 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி 364 ரன்கள் இலக்கை கடக்க முயல்கிறது.

இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் வைபவ் முறையே 48, 45 மற்றும் 86 ரன்கள் பெற்றுள்ளார். கடந்த போட்டியில், அவர் வெறும் 20 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஜூன் மாதம் நிறைவடைந்த 18-வது ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து கவனம் பெற்றார். அப்போது அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.

முந்தைய ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய யு-19 அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவர் 56 பந்துகளில் சதம் அடித்து மொயின் அலி 2005-ல் நிகழ்த்திய சாதனையை எட்டினார்.

அதிவேக சதம் அடித்த வீரர்கள் – யு19 ஒருநாள் கிரிக்கெட்:

  • வைபவ் சூர்யவன்ஷி (இந்தியா) – 52 பந்துகள் – 2025
  • கம்ரான் குலாம் (பாகிஸ்தான்) – 53 பந்துகள் – 2013
  • தமீம் இக்பால் (வங்கதேசம்) – 68 பந்துகள் – 2005/06
  • ராஜ் அங்கத் பவா (இந்தியா) – 69 பந்துகள் – 2021/22
  • ஷான் மார்ஷ் (ஆஸ்திரேலியா) – 70 பந்துகள் – 2001/02
Facebook Comments Box