சேலம் அருகே அரசுப் பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உடற்கல்வி ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த சிவகுமார், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், சிவகுமார் ஒரு மாணவியின் புகைப்படத்தை எடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார்.
தலைமை ஆசிரியர் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய சைல்டு லைன் அதிகாரிகள், தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் மீது ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, சிவகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.