முன்னாள் மோசடி வழக்கில் சிக்கிய தாய்-மகள் மீது தற்போது பரபரப்பு!
திருப்புவனம் மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு புகாருக்காக விசாரணை செய்த தனிப்படை போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நகை திருட்டு புகாரை அளித்த நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி அம்மாள் மீது, 14 ஆண்டுகளுக்கு முன்பு பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தற்போது வெளியாகியுள்ளது.
விவரங்களுக்கு வந்தால், 2011-ம் ஆண்டு மே 10-ந் தேதி, மதுரை அருகே உள்ள பச்சக்கோப்பன்பட்டியைச் சேர்ந்த ராஜாங்கம், தெய்வம், வினோத்குமார் ஆகியோர், அப்போது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
அதில், ஆலம்பட்டியைச் சேர்ந்த சிவகாமி அம்மாள், அவரது கணவர் ஜெயபெருமாள், மகன் கவியரசு, அவருடைய மனைவி சுகதேவி, மகள் நிகிதா மற்றும் விளாங்குடி பகத்சிங் ஆகியோர் நெருங்கிய குடும்ப உறவினர் என்றும், 2010-ல் அரசு வேலை வாங்கித் தருவதாக நம்பிக்கை அளித்து, தெய்வம் மற்றும் வினோத்குமாரிடமிருந்து மொத்தமாக ரூ.16 லட்சம் பெற்றுக் கொண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதில், தெய்வத்திற்கு ஆசிரியர் வேலை மற்றும் வினோத்குமாருக்கு வி.ஏ.ஓ. வேலை வாங்கித் தருவதாக கூறிய கவி அரசுவுக்கு பல்வேறு தவணைகளில் பணம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வேலை கிடைக்கவில்லை என்றும், பணத்தை திருப்பித் தர மறுத்ததுடன், மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் 2011-ல் சிவகாமி அம்மாள் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனுடன், காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் நகை திருட்டுக்காக புகார் அளித்த நிகிதா மற்றும் அவரது தாயார் ஏற்கெனவே மோசடி வழக்கில் குற்றவாளிகளாக இருப்பது வெளியாகி, இந்த வழக்கின் சுழற்சி இன்னும் சிக்கலானதாக மாற்றியுள்ளது.