நீலகிரி மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் குற்றச்சாட்டில் கைது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள ஹோப் பார்க் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 50) என்ற நபர், கடந்த 23 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஊட்டி அருகேயுள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்ற தொடங்கினார். அங்கு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் பாடம் கற்பித்து வந்தார்.
சமீபத்தில், பள்ளியில் பாலியல் கல்வி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் போலீசார் சென்றனர். இக்காலையில் “நல்ல தொடுதல்”, “தவறான தொடுதல்” ஆகியவற்றின் இடையிலான வேறுபாடுகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஆறாம் வகுப்பில் படிக்கும் 12 வயதான மாணவி ஒருவர், அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் தகாத முறையில் தன்னைத் தொட்டதாக புகார் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பல மாணவிகளும், அவர் தங்களின் மார்புப் பகுதி மற்றும் உடலின் பின்புறம் உள்ளிட்ட இடங்களைத் தொட்டு தவறான நடத்தை காட்டியதாக தெரிவித்துள்ளனர். சில மாணவிகள், செந்தில்குமார் முத்தமிட முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளனர்.
மொத்தமாக 21 மாணவிகள் அவர்மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக தகவல் பெற்ற போலீசார் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். ஊட்டி ஊரக ஆய்வாளர் விஜயா தலைமையில் நடந்த விசாரணையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, செந்தில்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.