மு.க. ஸ்டாலின் பேச்சு: “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கம் திமுக எல்லைகளுக்கு அப்பாலும் விரியும்!”

0

மு.க. ஸ்டாலின் பேச்சு: “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கம் திமுக எல்லைகளுக்கு அப்பாலும் விரியும்!”

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாகவும், வந்தால் கலந்தாலோசித்து முடிவெடுப்போம் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று தொடங்கிய “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கம் குறித்து அவர் கூறும்போது, மாநிலத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 30% பேரை திமுக உறுப்பினர்களாக இணைத்தல் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்தார். ஜூலை 3ஆம் தேதி முதல் வீடுவீடாக சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தின் மண், மொழி மற்றும் மரபுகளை காக்க மக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைய வேண்டும் என்பதே இயக்கத்தின் நோக்கம். மத்திய அரசின் தடைகளை எதிர்த்து தமிழகம் ஒருங்கிணைந்து எதிர்கொள்வதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் கூறினார்.

மத்திய அரசு தமிழக வளர்ச்சியை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், இந்தச் சூழ்நிலையில் ஆளும், எதிர்க்கட்சிகளை விலக்காமல் அனைத்து வீடுகளிலும் சென்று மக்களைச் சந்திக்க இருக்கிறோம் என தெரிவித்தார்.

திமுகவில் இணைய விரும்புவோர் செயலி மற்றும் விண்ணப்பப்படிவத்தின் மூலமாக சேரலாம். இது வெறும் உறுப்பினர் சேர்க்கை மட்டும் அல்ல; கட்சி எல்லைகளைத் தாண்டி தமிழ்நாட்டின் நலனுக்காக நடைபெறும் பரப்புரை என்றும் அவர் கூறினார்.

“தமிழகம் ஒருமித்த நிலையில் இருந்தால் எந்த சக்தியும் அதை குலைக்க முடியாது. பாஜகவின் அரசியல், பண்பாட்டு மற்றும் பொருளாதார ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்வதற்கான நெஞ்சுரம் உள்ள சக்தியை உருவாக்கவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது” என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில்கள்:

திருபுவனம் விவகாரத்தில் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பழனிசாமியின் வீட்டுக்கும் செல்வீர்களா? என்ற கேள்விக்கு, “நிச்சயமாக சென்று விருப்பம் உள்ளவர்களை இணைத்துக்கொள்வோம். கட்டாயப்படுத்த மாட்டோம். நான் அந்த பகுதியில் இருந்தால் அவருடைய வீட்டுக்கும் செல்வேன்” என்றார்.

கூட்டணிக் கட்சிகள் கூடுதல் இடங்கள் கேட்பது குறித்து தேர்தல் தேதிக்குப் பிறகு உட்கார்ந்து தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா தொடர்ச்சியாக வருவதாக கூறியது குறித்து, “அவர்கள் அடிக்கடி வரட்டும். அவர்கள் பேசுவது பொய் என்பதை மக்கள் அறிவார்கள். இது எங்களுக்கு தேர்தலில் சாதகமாக அமையும்” என்றார்.

Facebook Comments Box