மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் “உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில், பட்டுக்கோட்டை, பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய தொகுதிகளின் திமுக நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்தந்த தொகுதிகளில் உள்ள பொதுமக்களின் மனநிலை, திமுக ஆட்சிக்கு கிடைக்கும் ஆதரவு, அரசின் செயல்திறன் குறித்து நிர்வாகிகளிடம் தனிப்பட்ட முறையில் கருத்துகளை கேட்டறிந்து வருகிறார்.
மேலும், தொகுதிகளில் கட்சி உறுப்பினர்களின் மனநிலை, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பற்றியும் ஸ்டாலின் விரிவாக பேசி வருகிறார்.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே, திமுக ஆட்சியை மீண்டும் பிடிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளது. அதற்காக, “ஓரணியில் தமிழ்நாடு” என்ற திட்டத்தின் கீழ் வீடு தேடிச் செல்லும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடக்கின்றன.
இந்த நடவடிக்கைகளுக்கு ஒரு பகுதியாக, “உடன்பிறப்பே வா” என்ற நிகழ்ச்சியின் கீழ் தொகுதி வாரியாக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் ஸ்டாலின்.
இன்று, இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் பாபநாசம், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பாறை ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்கிறார். இதில், பட்டுக்கோட்டை தொகுதி திமுகவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க, பாபநாசம் மற்றும் மணப்பாறை தொகுதிகள் திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன.