“இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உருவான உலக அமைப்பு வேகமாக மாறி வருகிறது” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், “இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் ஒரு அமைப்பாக இல்லாமல், நமது அடிப்படையான மதிப்புகளின் ஒரு பகுதியாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அரசு பயணமாக கானா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். நாடாளுமன்ற சபாநாயகர் அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின் இந்த சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
“இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு அல்ல” – கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
பிரதமர் மோடி கூறுகையில், “இந்த மதிப்புள்ள சபையில் உரையாற்றுவது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. ஜனநாயகத்தையும், கண்ணியத்தையும் பெருமையாக கொண்டுள்ள கானாவில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு ஒரு பாக்கியம்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராக, 140 கோடி இந்தியர்களின் நல்வாழ்த்துகளையும், நேசத்தையும் உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். தைரியமாக திகழும், வரலாற்றை வென்றும் உயரும், சவால்களை நேர்மையாக எதிர்கொள்ளும் நாடாக கானா விளங்குகிறது. கானாவின் ஜனநாயக ஆசைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்ற நோக்கம், ஆப்பிரிக்காவுக்கே ஊக்கம் அளிக்கிறது.
இந்தியாவிற்கு ஜனநாயகம் என்பது வெறும் சட்டம் அல்லது அமைப்பாக இல்லை. அது நம் கலாசாரத்தின் ஒரு ஓர். ரிக் வேதம் கூறுவதுபோல், ‘எல்லா திசைகளிலிருந்தும் நன்மை வரும்’ என்பது நம் நம்பிக்கை. பல்வேறு கருத்துக்களை திறந்த முறையில் ஏற்கும் தன்மையே ஜனநாயகத்தின் மையம்.
இந்தியாவில் 2,500-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. வெவ்வேறு மாநிலங்களை ஆளும் 20 கட்சிகள், 22 அதிகாரப்பூர்வ மொழிகள், ஆயிரக்கணக்கான பேச்சு வழக்குகள் கொண்ட நம் தேசம், பன்முகத்தன்மையில் பெருமை கொள்கிறது. வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, அவர்களை வரவேற்கும் மனப்பான்மையும் இதன் விளைவாகும். இது, இந்தியர்கள் உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் அவர்களிடம் காணப்படும் உணர்வாகும். கானாவிலும், அவர்கள் தேநீரில் கரையும் சர்க்கரை போல சமூகத்தில் கலந்திருக்கின்றனர்.
இந்தியா மற்றும் கானா இடையிலான உறவை விரிவான கூட்டாண்மையாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கு விரைவில் மாறிக்கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, உலக தெற்கின் எழுச்சி மற்றும் மக்கள்தொகை மாற்றம் ஆகியவை இந்த மாறுதலுக்கு காரணமாக உள்ளன. காலனித்துவ ஆட்சி போன்ற சவால்கள் இன்னும் புதிய வடிவங்களில் உள்ளன.
இந்தியாவுக்கும் கானாவுக்கும் ஒரு பொது கனவு உள்ளது – ஒவ்வொரு குழந்தைக்கும் சம வாய்ப்புகள், ஒவ்வொரு குரலுக்கும் செவிகொடுக்கும் சமூகத்தை உருவாக்குவது. இந்தியா ஆப்பிரிக்காவை தனது இதயத்தில் ஏற்றிக் கொண்டுள்ளது. இன்று மட்டுமல்ல, எதிர்கால தலைமுறைகளுக்கும் பயனளிக்கும் உறவை உருவாக்குவோம்” என தெரிவித்தார்.
மேலும், கானா அதிபர் ஜான் டிராமனி மகாமாவுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையில் கலாசாரம், தரம் சான்று, ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் போன்ற துறைகளில் நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதற்குப்பின், கானா அரசு பிரதமர் மோடிக்கு நாட்டின் மிக உயரிய விருதை வழங்கியது.