பாஜக அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் மீது பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கும் மற்றும் வஞ்சிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு தனது ஆட்சி ஆரம்ப காலத்திலிருந்தே இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை தமிழ்நாட்டில் திணிக்க முயன்றுவருகிறது. 2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகளில் மட்டும் சமஸ்கிருத வளர்ச்சிக்காக ரூ. 2532.59 கோடி செலவிடப்பட்டுள்ளதாம். அதே நேரத்தில் தமிழ் உள்ளிட்ட ஐந்து தென்னிந்திய மொழிகளுக்காக கூட்டு நிதியாக ரூ.147.56 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருத நிதியைவிட 17 மடங்கு குறைவாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிய கல்விக் கொள்கை மற்றும் பிரதமர் கல்வித் திட்டத்தின் கீழ் இந்தி பாடமாக இல்லையென்றால் நிதி மறுக்கப்படும் என்கிற மத்திய அரசின் நிபந்தனைகள் தமிழக பள்ளிக்கல்வி துறையை பாதித்துள்ளதாகவும், கீழடி தொல்லியல் ஆய்வில் தமிழர்களின் தொன்மையை மறுக்கும் நோக்கத்தில் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இயற்கை பேரிடர் நிவாரணம், ஊரக வேலை திட்ட நிதி குறைப்பு போன்ற பல்வேறு விஷயங்களிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒதுக்கீடு கேட்டு இருந்தும் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளை மதவாதம் மூலம் மக்கள் கவனத்தைத் திசைதிருப்பி தேர்தல் லாபம் தேடும் முயற்சியாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்புடன் கருதி, அதனைத் தமிழ்நாட்டு மாநிலக் குழுவாக கண்டிப்பதாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.