“திருமணமான அன்று இரவே நிகிதா ஓடிவிட்டார்” – பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் புகார்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிளாக் கட்சித் தலைவர் திருமாறன், “நிகிதா குடும்பத்தை கடந்த 21 ஆண்டுகளாக நான் அறிந்தவனாக இருக்கிறேன். நிகிதா என்னை திருமணம் செய்த உடனே, பாலும் பழமும் சாப்பிடும் நேரத்திற்கு முன்பே வீட்டை விட்டு விலகினார். இவர் இதற்கு முன் மூன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்து ஏமாற்றியுள்ளார். திருமணமான பிறகு, ஒரே நாளில் இடைவெளி விட்டு சென்றுவிடுகிறார்.
பின்னர் திருமணம் செய்தவர்கள் மீது வரதட்சிணை புகார் கொடுத்து, அந்த குடும்பங்களை மனவலி மற்றும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளார். தொடர்ந்து மிரட்டி பணம் பெறுவது அவரின் பழக்கமாகியுள்ளது. என் விவாகரத்துக்காக அவரது தந்தை ரூ.10 லட்சம் வாங்கிய பின்னரே சமாதானமாக நடந்தது. இவர் திருமண மோசடிக்கு மட்டுமல்லாமல், வேலை பெற்றுத்தருவதாகவும் பலரிடம் மோசடி செய்துள்ளார்.
புகார் அளித்த நபர் குறித்து முழுமையாக விசாரணை நடைபெற வேண்டும். நகை திருட்டு குற்றச்சாட்டு உண்மையற்றது. இது உண்மையில் கார் நிறுத்தம் குறித்த வாக்குவாதத்திலிருந்து உருவான ஈகோ சண்டையாகும். அந்த சச்சரவின் முடிவே கொலையாக மாறியுள்ளது.
அஜித் குமாரின் கொலைக்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். நிகிதா குடும்பத்தை முதன்மை குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும். நிகிதாவின் தந்தை ஓய்வுபெற்ற கோட்டாட்சியர், அவருடைய தாயார் அரசு ஊழியர். 20 ஆண்டுகளுக்கு முன்பே அவர்களை பாதுகாக்க இருவர் எஸ்பிக்கள், ஒரு டிஎஸ்பி உதவியுள்ள தகவலும் உள்ளது. தற்போது இருக்கும் அதிகாரிகளும் அவர்களுக்கு துணைபோனிருக்கலாம்” என்று தெரிவித்தார்.
நிகிதா, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். நிகிதா, அவரது தந்தை ஜெயபெருமாள், தாயார் சிவகாமி அம்மாள், சகோதரர் கவியரசு (வைபவ் சரண்), அவரின் மனைவி சுகதேவி மற்றும் உறவினர் பகத்சிங் ஆகியோர் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றதாக ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நேற்று (ஜூலை 3) திருமங்கலம் உதவி எஸ்.பியிடம், நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றி பல புகார்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.