திமுக ஆட்சியிலும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தொடர்கின்றன: பெ.சண்முகம் விமர்சனம்

0

மடப்புரத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலர் அஜித்குமார் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தமிழகத்தில் காவல் துறையின் அதிகார மீறல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டெர்லைட் கோர துப்பாக்கிச் சூடு தொடர்பாக யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. தற்போது திமுக ஆட்சியிலும் போலீசாரின் தாண்டவங்கள், மனித உரிமை மீறல்கள், கொடுமையான தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.

இந்த காவல் துறை முறைகேடுகள் தொடர்பாக அரசு சீரான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டோருக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் இதுவரை 24 காவல் நிலையங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அஜித்குமாரின் மரணம், தலைமைச் செயலகத்திலிருந்து வந்த அழுத்தத்தால் ஏற்பட்டது என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் அந்த அழுத்தம் விதித்த அதிகாரி யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்காமல், மறைக்கப்படுகிறது. அந்த ஐஏஎஸ் அதிகாரியின் பெயர் வெளியில் வரும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிகிதா மற்றும் அவரது தாயார் கோயிலுக்குச் சென்றபோது அவர்கள் பயணித்த வாகனம் எதுவெனும் விவரங்களை அரசும், போலீசாரும் வெளியிட வேண்டும்.

இவ்வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்த பிறகு, “இனி நமக்கு பொறுப்பில்லை” என்று அரசு கைதுடைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. மாநிலம் முழுவதும் தனிப்படைகள் கலைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அறிவித்திருக்கிறார். இதனால் எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி ஆகியோர் தனிப்படை என்ற பெயரில் ரவுடிக் கூட்டங்களை வைத்திருந்தனர் என்பது தெளிவாகியுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தலையீட்டினால்தான் கவனத்துக்கு வந்தது. இந்தக் கொலைக்குப்பின் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும்.

சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box