ராஜேந்திர சோழர் நினைவாக பாசனத் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
சோழகங்கம் ஏரி கட்டி 1000 ஆண்டுகள் நிறைவடைந்த இந்நிலையில், அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியது:
“தமிழர் பெருமையை உலகறிய செய்த மன்னர்களில் ஒருவரான ராஜேந்திர சோழன், 1023ஆம் ஆண்டில் கங்கை வரை வெற்றி பயணத்தை மேற்கொண்டு, ‘கங்கை கொண்ட சோழபுரம்’ நகரத்தையும், அதிலுள்ள பிரமாண்டமான கோவிலையும் அமைத்தார். இதைத் தொடர்ந்து 1025இல் ‘சோழகங்கம்’ என அழைக்கப்படும் ஏரியை கட்டி பாசன வசதியை ஏற்படுத்தினார். இப்போது அந்த ஏரிக்கு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசு சிறப்பாக விழா நடத்த வேண்டும்.
16 மைல் நீளமும், 3 மைல் அகலமும் கொண்ட சோழகங்கம் ஏரி தற்போது பராமரிப்பு இன்றி பாழடைந்து வருகிறது. அதனுடன் இணைந்துள்ள பழமையான பாசன அமைப்புகளும் அழிந்து கொண்டிருக்கின்றன. இதை மறுசீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2022 அக்டோபரில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் விழிப்புணர்வு நடைபயணத்தை மேற்கொண்டு இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கியேன். அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஜூன் 23ஆம் தேதி ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசு அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
மேலும், ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ராஜேந்திர சோழரின் பெயர் சூட்ட வேண்டும். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஆய்வு செய்ய, அதேக் கல்லூரியில் வரலாற்றுத் துறையுடன் முனைவர் பட்ட ஆய்வு நடவடிக்கையும் தொடங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.