பள்ளிகளில் ஒழுக்கக் கல்வி கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் – தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தல்

0

பள்ளிகளில் ஒழுக்கக் கல்வி கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும்” – தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒழுக்கக் கல்வி பாடத்திற்கும், தனிச்சிறப்பு வகுப்புகளுக்கும், மதிப்பீட்டு முறைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியத்தை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் (பொதுச் செயலாளர்) யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை நடந்த மாணவர் ஆதித்யாவின் கொலைச் சம்பவம் அனைவரையு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பள்ளி மாணவியர் தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்ட மனவெறுப்பால் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சச்சரவின் போது, 17 வயது ஆதித்யா உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

ஒரு மாணவன் தனது சகப் பாடசாலை மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழப்பது, பள்ளி நிர்வாகத்திற்கும் மாநில கல்வித்துறைக்கும் கடும் பிழையாகும். இவ்வாறு நிகழும் சம்பவங்கள் மாணவர்களில் ஏற்படும் தவறான பழக்கங்களை வெளிக்காட்டுவதோடு, பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்கான நடவடிக்கைகள் எவ்வளவு முக்கியமென்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.

இன்றைய மாணவர்களுக்கு பொறுப்புணர்வு, நல்லெண்ணம் மற்றும் ஒழுக்கம் ஆகியவை போதிய அளவில் கற்பிக்கப்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒழுக்கக் கல்வி, பள்ளிகளில் முறைப்படி வழங்கப்படாததால், மாணவர்கள் தவறான நட்புகள், வன்முறைச் செயல்கள், இணையத்தள மோகம், போதை பழக்கம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

ஒழுக்கக் கல்வியின்றி வளரும் பள்ளி சூழல், மாணவர்களின் மனநிலை வளர்ச்சிக்கே தடையாக இருக்கின்றது. இது அவர்களது எதிர்காலத்தையும் பாதிக்கும். எனவே, ஒழுக்கக் கல்வியை மாதந்தோறும் குறைந்தது ஒரு நாள் நிகழ்ச்சியாக, தனிச்சிறப்பு வகுப்புகளாக, மதிப்பெண்களுடன் கூடியதாக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பாக கல்வி பயிலவேண்டிய இடங்களில், இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்படுவது, கல்வி அமைப்பின் குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பான அனைத்து மாணவர்களுக்கும் சட்டப்படி தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒழுங்கும் ஒழுக்கமும் அடிப்படையாகக் கொண்ட பள்ளி சூழலை உருவாக்குவதற்காக அரசு உடனடியாக கடுமையான வழிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.

இவ்விதமான கொடூரமான நிகழ்வைக் கண்டித்து, உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் அரசு உடனடியாகத் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Facebook Comments Box