“காவல் துறை தங்களது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறது. இச்செயல் தொடர்ந்தால் திமுக அரசு வீழ்ச்சி அடைவது தெளிவாகத் தெரிகிறது,” என முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள மடப்புரத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினரை சந்தித்து, ரூ.2 லட்சம் நிதி உதவியை வழங்கி, ஆறுதல் கூறிய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
“சட்டப்படி செயல்பட வேண்டிய காவல்துறை, கொடூரமாக வன்முறைக்கு இடமளித்து, அஜித்குமாரின் உயிரை பறித்துள்ளது. இது மருத்துவ அறிக்கையாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் மனிதநேய அடிப்படையில் நடைபெற வேண்டும். நீதிமன்றமே நீதியளிக்கச் செயல்பட வேண்டிய இடம். ஆனால் தற்போது காவல்துறை தன்னிச்சையாக செயல்பட்டு, சட்டத்தை கைப்பற்றி அத்துமீறுகிறது. இதனை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கடுமையாக கண்டிக்கிறது. அஜித்குமார் குடும்பத்திற்கு நாங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.”
“தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு சீர்கேடான சூழ்நிலை குறித்து அனைவரும் அறிந்ததே. இது தொடர்ந்தால் திமுக அரசு வீழ்ச்சியை சந்திக்கத் தவறாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்து சிறந்த ஆட்சியை வழங்கினார். ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளின் இச்சைப்படி ஆட்சி நடைபெறுகிறது. இதனால் ஜனநாயகச் சுதந்திரம் சிதைக்கப்படுவதற்கான நிலை உருவாகிறது. சம்பந்தப்பட்ட போலீசாரை உடனடியாக விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உரிய தண்டனை வழங்க வேண்டும்.”
“அதிமுக தொண்டர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக நாம் தொடர்ந்து போராடுகிறோம். எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியபோது சட்டவிதிகளை உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்தினார். தொடர்ந்து 30 ஆண்டுகள் ஜெயலலிதா வழிநடத்தினார். மக்களிடையே அவர் மீது நிலைத்த நம்பிக்கை இருந்தது. தமிழகத்தின் நிதியின் பெரும்பகுதியை மக்களுக்காக பயன்படுத்தினார். ஆனால் இன்றைய சூழ்நிலை அதனைப் போல இல்லை. யார் முதல்வராக வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தாம்,” என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.