“இப்போது காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, இதயமும் அழிந்துவிட்டது” – பெ. சண்முகம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசினார். அந்த நிகழ்வில், தனிப்படை போலீஸாரால் கொலை செய்யப்பட்ட மடப்புரம் காளியம்மன் கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய பாதுகாப்புப் பணியாளர் அஜித்குமாரின் கொடூரமான படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். மோகன் தலைமையிலிருந்தார். மாநிலக் குழு உறுப்பினர்களான கே.அர்ச்சுணன், என். பாண்டி, எஸ்.கே. பொன்னுத்தாய் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பின்பு உரையாற்றிய மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியதாவது:
“அஜித்குமாரின் மரணம் தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் கூறியதுபோல், ஒரு மனிதனை கொல்ல நினைப்பவர்களுக்கே இந்தளவுக்கு கொடூரமாக தாக்கும் எண்ணமிருக்காது. இது வழக்கமான தாக்குதல் அல்ல, காவல்துறையின் மரண தாக்குதல். இந்தச் சம்பவம் தமிழக அரசு நம்மை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதற்கே எடுத்துக்காட்டாக உள்ளது. ஒரு அரசு தனது குடிமகனையே கொன்றுவிட்டது என்பதையே நீதிபதி நேரடியாக சுட்டிக்காட்டுகிறார். இது மிகப் பெரிய எச்சரிக்கையாகும்.
தினமும் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நகை திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால் இவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்கப்படுவது இல்ல. ஆனால் அஜித்குமாரை மட்டும் சுட்டுக் கொல்லும் அளவுக்கு அவசரமேண்டியது ஏன்? இதற்குப் பின்னணியில் யார் என்பதை அரசே தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். புகார் கொடுத்த நிகிதா என்ற பெண்ணுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஆனால் அவளது புகாருக்கு உடனே போலீஸார் இவ்வளவு மோசமாக பதிலளிக்க வேண்டும் என்ற அழுத்தம் யாரிடமிருந்து வந்தது?
இந்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரமோ, ஏற்கனவே மோசடி வழக்குகளுக்கு அடிப்பட்டவராக இருக்கிறார். காவல்துறையில் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டுமென்றால், முதலில் அரசு தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 13 பொதுமக்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை செய்து அறிக்கை அளித்தும், திமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக அந்த அறிக்கை நடவடிக்கைக்கு வரவில்லை. அதே நேரத்தில் அந்த நேரத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருந்த தற்போதைய முதல்வர், அந்த நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே அரசு மக்களுக்காக செயல்படுகிறதா இல்லையா என்பதைக் காட்டுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, “காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டது” என்று கூறியிருந்தார். ஆனால் இன்று நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இப்போது காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, இதயமும் அழிந்துவிட்டது.
ஊருக்கு பாதுகாப்பளிக்கவேண்டிய காவல்துறையினர் தற்போது தனிப்படை போலீஸர்கள் என்ற பெயரில் தனி ரவுடிகள் குழுக்களை வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு எஸ்பியும், டிஎஸ்பியும் தங்களுக்கென தனி அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். இது சட்டத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை முற்றிலும் சிதைக்கும் செயல்.
அஜித்குமார் கொலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை சம்பந்தப்பட்ட போலீஸாரை ஜாமீனில் விடக் கூடாது. அவர்கள் சிறையில் இருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட கோயில் பணியாளர்கள் இருவரும் போலீஸாருடன் தொடர்பு வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது; அவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் சட்டப்படி சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
அஜித்குமாரின் குடும்பத்துக்கு நீதியும் நிவராணமும் கிடைக்கும் வரை நாங்கள் களத்தில் இருந்து போராடுவோம்.”
இந்த நிகழ்வில், மதுரை மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநகரச் செயலாளர் மா. கணேசன், மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ். பாலா, தா. செல்லக்கண்ணு மற்றும் மதுரை துணை மேயர் டி. நாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.