தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரூ.63,339 கோடி வரி வசூல்: ஜிஎஸ்டி தினம் நிகழ்ச்சி
2017 ஜூலை 1 முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) 8 ஆண்டுகள் கடந்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய ஜிஎஸ்டி மண்டலத்தின் ஏற்பாட்டில் சென்னை கலைவாணர் அரங்கில் ஜிஎஸ்டி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முதன்மை தலைமை ஆணையர் ஏ.ஆர்.எஸ்.குமார் தலைமை வகித்தார். முன்னாள் முதன்மை ஆணையர் ராம் நிவாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
பின்னர் பேசிய ஏ.ஆர்.எஸ்.குமார் கூறியதாவது:
“‘ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. இது நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்திய முக்கிய முயற்சியாக விளங்குகிறது. குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஜிஎஸ்டியின் பங்கு கடந்த ஆண்டு 78% இருந்ததைவிட, இந்த ஆண்டில் 82% ஆக உயர்ந்துள்ளது,” எனத் தெரிவித்தார்.
2024-25 நிதியாண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரூ.63,339 கோடி வரி வசூலாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் (ரூ.57,987 கோடி) வருமானத்துடன் ஒப்பிடுகையில் 9.23% அதிகம் ஆகும். அதேவேளை, நடப்பு நிதியாண்டில் மே மாதம் வரை மட்டும் ரூ.11,209 கோடி வசூலாகியுள்ளது. இது 2023-24-ம் ஆண்டை விட 13.5% அதிகமாகும் என அவர் தெரிவித்தார்.
மேலும், வரி ஏய்ப்பு, தவறான வரி செலுத்தல், தணிக்கை மற்றும் புதிய பதிவு நடவடிக்கைகளில் 11.62% முதல் 23.85% வரை வசூல் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விழாவில் சிறந்த வரி செலுத்துநர்களும், சிறப்பாக பணியாற்றிய ஜிஎஸ்டி அலுவலர்களும் பாராட்டுகளுடன் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கார்போரண்டம் யுனிவர்சலின் இயக்குநர் ஸ்ரீதரன் ரங்கராஜன், வடசென்னை பிரிவு ஆணையர் ராம்நாத் ஸ்ரீனிவாச நாயக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.