இந்தியா vs இங்கிலாந்து – 2வது டெஸ்ட்: ஸ்மித், புரூக் ஜோடியின் அதிரடி – இந்தியா 244 ரன்கள் முன்னிலை!
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் 84 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த பின்னர், ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தால் 400 ரன்கள் தாண்டும் நிலைக்கு கொண்டு சென்றனர்.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் அடித்து கலைச்சேலியை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் முடிவில் 77 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்திருந்தது.
மூன்றாவது நாளில், ஜோ ரூட் (22) மற்றும் பென் ஸ்டோக்ஸ் (0) இருவரும் முகமது சிராஜின் தொடர்ச்சியான பந்துகளில் வெளியேறினார்கள். பின்னர் களத்தில் வந்த ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் உடன் சேர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தினர்.
ஸ்மித், பிரசித் கிருஷ்ணாவின் ஓவரில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார். 80 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் தனது இரண்டாவது சதத்தை வென்றார். மதிய இடைவேளைக்கு முன்னர் சதம் அடைந்த முதல் இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார்.
மதிய இடைவேளையில் இங்கிலாந்து 5 விக்கெட்களுக்கு 249 ரன்கள் எடுத்தது. ஹாரி புரூக் (91), ஜேமி ஸ்மித் (102) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர், ஹாரி புரூக் 137 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 9வது சதத்தை அடித்தார். தேனீர் இடைவேளைக்கு முன் இங்கிலாந்து 355 ரன்கள் எடுத்தது. இருவரும் சேர்ந்து இந்திய பந்து வீச்சை சமாளித்தனர்.
82.1-வது ஓவரில் இங்கிலாந்து 387 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆன் ஆப்ஷனை தவிர்த்தது. ஹாரி புரூக் 158 ரன்களில் ஆகாஷ் தீப்பால் கிளீன் போல்டாகினார். 6வது விக்கெட்டுக்கு 302 ரன்கள் சேர்ந்தது.
இங்கிலாந்து அணியின் கடைசி மூன்று விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றினார். இங்கிலாந்து 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்மித் 184 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனனர்.
இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 28 ரன்களில் ஜோஷ் டங் பந்தில் வெளியேறினார். கே.எல்.ராகுல் (28), கருண் நாயர் (7) ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். மூன்றாவது நாள் முடிவில் இந்தியா 13 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்து, மொத்தத்தில் 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதமுள்ளது.