நீதிமன்ற வழக்குக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: பரந்தூர் போராட்டக் குழு அறிவிப்பு

0

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மதுரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குடன் எங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு இயக்கக் குழு விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக குழுவின் தலைவர் திரு. ஜி. சுப்பிரமணியனும், செயலாளர் திரு. எஸ்.டி. கதிரேசனும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“பரந்தூரில் உருவாக்கப்படவுள்ள புதிய விமான நிலைய திட்டத்திற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து 1,100-வது நாளை நோக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இந்தப் போராட்டம், திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது.

பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு குழு அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்க விரும்பும் பலர் ஆகியோரின் ஆதரவைப் பெற்று அமைதியான முறையில் போராடி வருகிறது. சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான சரியான சூழ்நிலையை மற்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, இதுவரை நீதிமன்ற வழக்கு தொடராமல் உள்ளோம்.

இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு சமூக ஆர்வலர் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வழக்கிலும், அதனைத் தொடர்ந்தவர்களுடனும் எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. எங்கள் அமைதியான எதிர்ப்பு இயக்கமும், எதிர்காலத்தில் எடுக்கவுள்ள சட்ட நடவடிக்கைகளும் தனிச்சுயத்துடன் தொடரும்.”

Facebook Comments Box