மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பூனை கடிக்கும் பரிதாபம் – பக்தர்கள் கவலை
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வன்னி மரத்தடி விநாயகர் சன்னதி அருகே, பூனை ஒன்று பக்தர்களை கடித்து வருவதாக புகார்கள் எழுகின்றன. இதனால் சிலர் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பூனையை அகற்ற கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோயிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து எண்ணற்ற பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். கடந்த சில வாரங்களாக ஒரே பூனை, தரிசனத்திற்கு வரும் சிலரை கடித்து வருகிறது என தெரிகிறது. விழிப்புணர்வுடன் இருப்பவர்கள் ரேபீஸ் தடுப்பூசி போடுகிறார்கள். ஆனால், மற்றவர்கள் “வளர்ப்பு பூனையாக இருக்கலாம்” என தவறாகக் கருதி அலட்சியமாக இருக்க கூடாது என மருத்தவர்கள் எச்சரிக்கின்றனர்.
தன்னை பூனை கடித்த சம்பவம் குறித்து ஒரு பக்தர் கூறியதாவது:
“தினமும் அதிகாலையில் தரிசனத்திற்கு செல்லும் பழக்கமுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, வன்னி மரத்தடி விநாயகர் அருகே பூனை கையில் கடித்தது. பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தினேன். இதுவரை மூன்று தடுப்பூசி போட்டுள்ளேன், இன்னும் ஒன்று போட வேண்டியுள்ளது.”
இது குறித்து கோயில் உதவி ஆணையர் லோகநாதன், “இத்தகைய புகார்கள் எங்களிடம் இதுவரை வரவில்லை. தெரிந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார்.
மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர்:
“வெறிநோய் பாதிப்பு நாய்களுக்கு மட்டுமல்ல. பூனைகள், ஆடு, மாடு போன்றவையும் கடித்தால், தவறாமல் ரேபீஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.”