முன் அனுமதியின்றி விடுப்பெடுத்தால் ஊதியம் வழங்கிய நிர்வாகத்துக்கே பொறுப்பு – சென்னை உயர்நீதிமன்றம்
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாகப்பட்டினம் கிளையில் மேலாளராக பணியாற்றிய இளங்கோவன், 2006 முதல் 2008 வரையிலான காலத்தில் முன்னணுமதியின்றி 117 நாட்கள் விடுப்பெடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், தடையில்லாச் சான்றில்லாமல் சிங்கப்பூர் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஏழு முறை பயணம் செய்ததாகவும், அதே நாட்களுக்கான ஊதியமாக ரூ.1 லட்சம் பெற்றதாகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றம் அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, மனுதாரர் விடுப்பு கோரி விண்ணப்பித்திருப்பதும், நிர்வாகமே ஊதியம் வழங்கியிருப்பதும் காரணமாக, இளங்கோவனுக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுகள் பொருந்தாதவை என தீர்மானித்தார். அதனடிப்படையில் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நீக்கியும், ‘‘துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் குற்றவியல் பொறுப்பேற்ற முடியாது’’ என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.